குறை தீர் கூட்டத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

X
போதிய பயிர் நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை தீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் ஒதுக்கீடு செய்யாத மற்றும் நூறு நாள் வேலை திட்டத்துக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன், வடக்கூர் எல். பழனியப்பன், வெள்ளாம்பெரம்பூர் துரை. ரமேஷ், பாச்சூர் ஆர். புண்ணியமூர்த்தி உள்பட பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்து, கூட்டரங்கத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றதைத்தொடர்ந்து, விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்: சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: பாபநாசம் அருகே கொள்ளிடத்தில் தனித் தீவாக உள்ள எடக்குடி கிராமத்தில் மணல் திட்டை தனியாருக்கு விற்க சுரங்கத் துறை முயற்சி செய்து வருகிறது. இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: நிகழாண்டு தூர் வாரும் பணியை முன்னதாகவே தொடங்க வேண்டும். மேலும், பாசன வாய்க்கால்கள், ஏரிகள் உள்ளிட்டவற்றை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொன்னவராயன்கோட்டை வா.வீரசேனன்: கல்லணைக் கால்வாயில் முழுமையாக சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ. 2 ஆயிரத்து 500 கோடி தேவைப்படுகிறது. இதற்கான நிதியை வருகிற நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ்: பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவூல அலுவலர்: வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கை செயலி மூலம், பணம் வந்துள்ளதைத் தெரிந்து கொள்ளலாம். ராயமுண்டான்பட்டி வெ.ஜீவகுமார்: மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பெரிய அளவில் கொள்முதல் பணி நடைபெறும் நிலையில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் முதுநிலை மண்டல மேலாளர் பதவி காலியாக உள்ளது. முழுநேர முதுநிலை மண்டல மேலாளரை நியமிக்க வேண்டும். ஆட்சியர்: இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் பேசியுள்ளேன். அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டிய நிலையில், ஏறத்தாழ 700 மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுகிறது. அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதால், நாள்தோறும் 1,500 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும். ஆம்பலாப்பட்டு அ.தங்கவேல்: தென்னையில் வெள்ளை நிற பூச்சிகள் தாக்குதல் காரணமாக காய்ப்பு குறைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவோணம் வி.கே.சின்னதுரை: மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு கோருவதற்கான இழப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? வேளாண் இணை இயக்குநர் கோ.வித்யா: பெரும்பாலும் அனுப்பப்பட்டுள்ளது. அறுவடைப் பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன் பகுப்பாய்வு செய்து அனுப்பப்படும்.
Next Story

