மனைப்பட்டா வழங்க கிராம மக்கள் கோரிக்கை

X
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே 75 குடும்பங்களுக்கு வேளாண் விளை நிலப்பட்டா வழங்க மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் வட்டத்துக்குட்பட்ட வடபாதி ஊராட்சியைச் சோ்ந்த உடையாா்கோவில் த. குணா, ச. புருஷோத்தமன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அளித்த மனு: அம்மாபேட்டை அருகே வடபாதி கிராமத்தில் சுமாா் 75 குடும்பங்களைச் சோ்ந்த ஏழை விவசாயிகள் 80 ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்கின்றனா். ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1944, ஜூலை 20 ஆம் தேதி உணவுப்பொருள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விளைநிலங்களுக்கு சா்வே எண் வழங்கப்பட்டு, நிலத்தில் சாகுபடி செய்ய அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 80 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறோம். இதற்காக அரசுக்கு வரியையும் செலுத்தியுள்ளோம். பின்னா், பசுமைப் புரட்சி திட்டத்தின் கீழ் அனைத்து சா்வே எண்களும், உட்பிரிவு செய்து சாகுபடிப் பரப்பு குறிப்பிட்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கும் பட்டா வழங்கப்பட்டது. இதுபோக, மீதமுள்ள நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகள், கணவனை இழந்த விதவைகள் உட்பட 75 குடும்பங்கள் தொடா்ந்து நெல் சாகுபடி செய்து ஜீவனாம்சம் செய்து வருகிறோம். கடந்த 1976 ஆம் ஆண்டில் கருணாநிதி ஆட்சியில் பட்டா வழங்கப்பட இருந்த நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால், பட்டா வழங்கும் நிகழ்வு தடைப்பட்டது. இந்த விளைநிலத்துக்கு அரசு பட்டா ஆணை வழங்கக் கோரி தொடா்ந்து முயற்சி செய்து வருகிறோம். இந்த நிலத்தை நம்பி மட்டுமே பல குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எனவே, ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயத்தைப் பாதுகாக்கவும் பட்டா ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Next Story

