கோவை: வெள்ளிங்கிரி மலையில் குவிந்த பக்தர்கள் !
தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, சிவராத்திரி மற்றும் சர்வ அமாவாசையை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் நிரம்பி வழிந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை, சிவபெருமானின் புனிதத் தலமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். இந்த ஆண்டு சிவராத்திரி மற்றும் சர்வ அமாவாசை ஒரே நேரத்தில் வந்ததால், வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, ஏழு மலைகளை கடந்து சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தனர். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டனர்.
Next Story



