சேலத்தில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்

சேலத்தில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்
X
கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கிகளின் 4-வது காலாண்டுக்குரிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். டி.எம்.செல்வகணபதி எம்.பி. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் 232 பொதுத்துறை வங்கி கிளைகள், 192 தனியார் வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 117 அரசு சார்ந்த வங்கிகள் என மொத்தம் 541 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இந்த வங்கிகள் மூலம் வேளாண்மை, கல்விக்கடன், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை திட்டங்களுக்காக கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.24 ஆயிரத்து 156 கோடியே 18 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் வங்கிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்வமுடன் தொழில் தொடங்க வரும் தொழில் முனைவோர்கள் மற்றும் கல்விக்கடன் கேட்டு வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டவர்களுக்கு வங்கிக்கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பாரத வங்கியின் மண்டல மேலாளர் சரவணன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிவகுமார், தாட்கோ மேலாளர் ராமதாஸ் மற்றும் பல்வேறு வங்கி மேலாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story