கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த அரசு பெண் டாக்டர் பணி இடைநீக்கம்

X
சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியில் பசுபதி ஸ்கேன் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. குறிப்பாக இந்த மையத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் கர்ப்பிணிகளை அழைத்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய பெண் டாக்டர் முத்தமிழ் மற்றும் தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக நர்சாக பணியாற்றிய கலைமணி ஆகியோர் தனியாக இந்த ஸ்கேன் மையத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் ஆய்வின் போது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கருவி மூலம் பரிசோதனை செய்து கண்டறிந்து கூறி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதற்காக ஒரு கர்ப்பிணியிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வரை இடைத்தரகர்கள் மூலம் கட்டணம் வசூலித்து உள்ளனர். பின்னர் அதிகாரிகள் அந்த மையத்துக்கு ‘சீல்' வைத்ததுடன் அங்கிருந்த பரிசோதனை கருவிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனியாக ஸ்கேன் மையம் நடத்தி வந்த பெண் டாக்டர் முத்தமிழ், கிராம சுகாதார நர்சு அம்பிகா ஆகியோர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். உடந்தையாக இருந்த தற்காலிக நர்சு கலைமணியை பணி நீக்கம் செய்ய உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர்கள் மீனாட்சி சுந்தரி, மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், மாநகர் நல அலுவலர் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
Next Story

