குடிநீர் திட்ட பணிகளை நகர்மன்றத் தலைவர் ஆய்வு
திருச்செங்கோடு நகராட்சி பகுதியைச் சேர்ந்த 19, 20, 21 ஆகிய வார்டுகளை சேர்ந்த கூட்டப் பள்ளி காலனி, வேளாளர் காலனி, ஜீவா நகர், பூங்கா நகர், ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. இந்த வீடுகளுக்கு ஆவத்திபாளையம் பகுதியில் இருந்து காவிரி ஆற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகர விரிவாக்கத்தில் பல்வேறு குடியிருப்புகள் புதிது புதிதாக உருவாகி வரும் நிலையில் கூடுதலாக தண்ணீர் தேவைப் படுவதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரு மாத காலத்திற்குள் புள்ளா கவுண்டம் பட்டியில் இருந்து குடிநீர் வழங்க முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. திருச்செங்கோடு நகராட்சிக்கு புல்லா கவுண்டம் பட்டியில் இருந்து வரும் தண்ணீரில் ஒரு பகுதியை ஜீவா நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலமும், மற்றொரு பகுதியை கூட்டப் பள்ளியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரித்து,கூட்டப்பள்ளி ஜீவா நகர் பிருந்தாவன் நகர் பூங்கா நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா குடிநீர் வழங்க ரூ 25 லட்சம் மதிப்பில் குழாய் பதிக்கும் பணிகள் முதல் கட்டமாக துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் அருள், பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவடிவு, சம்பூர்ணம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story





