கோடை காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

X
சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பல்வேறு நிதி நெருக்கடிகள் இருந்தாலும் பொதுமக்களின் தேவைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். சீரான குடிநீர் வழங்கப்படுவதை அரசு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்வதுடன் எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைகள் முழுமையாக பொதுமக்களுக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்யும் வகையில் இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக கள ஆய்வு பணிகள் மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சத்துணவு திட்டங்களில் சத்துணவு வழங்கும் செயல்பாடுகளை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தும் வகையில் தனிக்கவனம் செலுத்தி அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தின் பராமரிப்பில் உள்ள பள்ளிக்கூடங்களில் பழுதுகள் ஏதேனும் உள்ளனவா? என்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தேவைக்கேற்ப புதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடர்புடைய அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குள் முடித்திட அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
Next Story

