விவசாயிகள் மகிழ்ச்சி

X
ஈரோடு மாவட்டத்தில் குறுகிய கால சாகுபடியான எள் விளைச்சல் அமோகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, முத்தம்பாளையம், வெள்ளோடு, சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டு தோறும் மானாவரி நிலங்களில், அதிக அளவில் எள் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் அதனடிப்படையில், வழக்கமான நெல், கரும்பு போன்ற பயிர் சாகுபடியுடன், குறுகிய கால பயிரான எள் செடிகளை கடந்த டிசம்பரில் சாகுபடி செய்திருந்தனர். தற்போது, வெயிலும், பனியும் கலந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. சாகுபடி செய்த எள் பயிர்கள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்துள்ளது. குறிப்பாக, எள் விளைச்சல் அமோகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது :குறைந்த நீர், குறுகிய நாட்களில் சாகுபடி செய்யப்படும் எள், குறைந்த மூலதனம் இருந்தால் போதுமானது. 90 நாட்களில் அறுவடைக்கு தயிராகிவிடும். ஏக்கருக்கு 3 முதல் 5 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும் நிலையில் எள் மூட்டை ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. அனைத்து செலவுகளும் போக, ஏக்கருக்கு 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதன்படி சில நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் சாகுபடி செய்யப்பட்ட எள் செடிகள் செழிப்பாக வளர்ந்து காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story

