ஆடுகள் பலி

ஆடுகள் பலி
X
சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில், 2 ஆடுகள் பலியான நிலையில், 17 ஆடுகள் படுகாயமடைந்துள்ளன.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மர்ம விலங்கு மற்றும் தெருநாய்கள் கடித்து குதறியதில், கடந்த ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உரிய நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில்சென்னிமலை அடுத்த சிறுக்களஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான அவர், தனது தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நாகராஜ் ஆடுகளை பட்டியலில் அடைத்து விட்டு, அருகேயுள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார்.பின்னர் அவரது ஆட்டுப்பாட்டிக்குள் புகுந்த 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள், அங்கிருந்த ஆடுகளையும், கோழிகளையும் கடித்துக் குதறியது. நேற்று காலையில் நாகராஜ் ஆட்டுப்பட்டிக்கு வந்த பார்த்தபோது,  2 ஆடுகள் மற்றும் ஒரு நாட்டுக்கோழி இறந்து கிடந்தது. 12 ஆடுகள் படுகாயத்துடனும், 5 ஆடுகள் லேசான காயத்துடனும் இருந்தன. இதனையறிந்த நாகராஜ் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனையடுத்து, இறந்த ஆடுகள் மற்றும் காயம்பட்ட ஆடுகளுடன் பாதிக்கப்பட்ட நாகராஜ், சிறுக்களஞ்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவகத்திற்கு சென்று, தெருநாய்களிடம் இருந்து தனது ஆடுகளை பாதுகாக்க கோரி குடியேறினார். மேலும், பலியான ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நாகராஜ் மற்றும் அப்பகுதி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பிரச்னைக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்
Next Story