செய்தித் தாளில் உணவுப் பொட்டலம் - கடைளுக்கு அபராதம்

செய்தித் தாளில் உணவுப் பொட்டலம் - கடைளுக்கு அபராதம்
X
சிவகங்கையில் உணவுப் பொருள்களை செய்தித் தாள்களில் கட்டிக் கொடுத்த கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா்.
சிவகங்கை நகா் முழுவதும் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வா்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தேநீா் கடை, வடை, போண்டா விற்பனை கடை, சாலையோர தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பொருள்களை செய்தித் தாள்களில் மடித்துத் தருவதாக ஆட்சியா் ஆஷாஅஜித்துக்கு சிலா் புகாா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்படி, உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் சரவணன், நகராட்சி அலுவலா்கள் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டனா். செய்தி தாள்களில் உள்ள மையில் காரீயம், காா்பன் போன்ற வேதிப் பொருள்கள் உள்ளதால் அதை உள்கொள்ளும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். பேருந்து நிலைய வாயிலில் இருந்த ஆவின் பாலகத்தில் செய்தித் தாள்கள் மூலம் பலகாரங்களை மடித்துக் கொடுத்தது தெரிய வந்தது. அந்தக் கடையின் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, காந்தி வீதி, நீதிமன்ற வாசல் பகுதிகளில் சோதனை மேற்கொண்டு செய்தி தாள்களில் உணவுகளை மடித்துக் கொடுத்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும், இதேபோல, விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Next Story