காங்கேயத்தில் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்காவிட்டால் மாபெரும் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

காங்கேயத்தில் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்காவிட்டால் மாபெரும் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
X
காங்கேயத்தில் நாய்கள் கடித்து 1,000 கால்நடைகள் உயிரிழப்பு: உரிய இழப்பீடு வழங்காவிட்டால் மாபெரும் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் முடிவு
காங்கேயத்தில் நாய்கள் கடித்து 1000 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன. உரிய இழப்பீடு வழங்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர். காங்கேயம் சட்டசபை தொகுதியில் தெருநாய்கள் கடித்ததில் சுமார் 1000 கால்நடைகள் பலியாகியுள்ளன. விவசாயிகள் தோட்டங்கள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தினசரி தெரு நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயிகள் பெரிதும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் காங்கேயம் சென்னிமலை எல்லையில் திட்டுப்பாறையில் அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி சிறை சென்றனர். இச்சம்பவம் காங்கேயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமியிடம் விவசாயிகள் முறையிட்டனர். மனுவை பரிசீலனை செய்த அமைச்சர் முத்துசாமி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினரிடம் தமிழக முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்துவிட்டு இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதியளித்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அமைதி காத்து வந்தனர். கடந்த ஒரு வருடங்களாக பலதரப்பட்ட போராட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்டவைகளை நடத்தியும், அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் மனுக்களை வழங்கியும், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களாக இழப்பீ டுக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். மேலும் ஒப்புதல் காலம் முடிவதற்குள் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கவேண்டும். தினசரி கால்நடைகள் இழப்பதால் விவசாயிகள் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தலாம் எனவும், இழப்பீடு தொகை குறைவாக இருந்தாலும் காலதாமதம் ஆனாலும் போராட்டம் நடத்தப்படும் எனவும், மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 11-ந் தேதி விவசாயிகள்-விலங்கு நல ஆர்வலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story