பழனிச்சாமி குருட்டு அதிர்ஷ்டத்தில் லாட்டரி சீட்டு கிடைப்பது போல் முதல்வரானார் - டிடிவி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக சார்பாக ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி புரட்சித்தலைவர் மற்றும் அம்மா அவர்களை முதல்வராக்கிய தொகுதி. பழனிச்சாமி குருட்டு அதிர்ஷ்டத்தில் லாட்டரி சீட்டு கிடைப்பது போல் முதல்வரானார். பொதுச் செயலாளர் பதவியை கையகப்படுத்தி வைத்துள்ளார். இரட்டை இலை சின்னம் அவரிடம் தான் உள்ளது. தேனி மாவட்டத்திலேயே அதிமுக மூழ்காத கப்பல் என்று கூறும் பழனிச்சாமி மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவளித்து தனது சுய லாபத்திற்காக சொந்த நலனுக்காக அதிமுகவை பலவீனப்படுத்தி வருகிறார். பழனிச்சாமிக்கு காவடி தூக்குபவர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு பழனிச்சாமி மூடுவிழா நடத்தி விடுவார். வருங்கால தமிழக அரசியல் வரலாற்றில் துரோகம் என்ற சொல்லுக்கு உவமையாக இருப்பார் எடப்பாடி பழனிச்சாமி. 1972 லிருந்து கட்சியில் இருக்கும் பழனிச்சாமி நான்தான் சீனியர் என்று கூறுவது பொய். மும்மொழிக் கொள்கை அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் எங்கள் கட்சி சார்பாக பிரதிநிதி கலந்து கொள்கிறார். அதைத்தவிர வேறு ஏதாவது பேசினால் வெளிநடப்பு செய்வோம். பழனிச்சாமி யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் ஆகலாம் என்று கூறுவது நயவஞ்சகமானது பொதுச் செயலாளர் ஆவதற்கு இத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும், என்று பைலாவில் சட்ட திட்டங்களை மாற்றியவர் பழனிச்சாமி. அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரண்டால்தான் தீயசக்தி திமுகவை வீழ்த்த முடியும். அம்மாவின் ஆட்சியை கொண்டுவர முடியும். இதைத் தொண்டர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். பணத்திற்காக சுயநலத்திற்காக இருக்கும் ஒரு சிலர் பின்னால் வருத்தப்படுவீர்கள்.யோசித்து முடிவெடுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவோடு அம்மாவின் ஆட்சி அமையும் என்று நினைக்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, எங்கு போட்டியிடுவது? என்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுத்தவுடன் உங்களிடம் கூறுகிறேன். சீமான் மீதான பாலியல் குற்றச்சாட்டை சீமான் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் சீமான் கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கு தொடுத்தவர் கூறினாலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர் கூறினாலும் அதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றமே கூறிவிட்டது. தன் மீது கரையில்லை என்றால் வழக்கை சீமான் எதிர்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. திமுகவினரின் அராஜகம் பெருகிவிட்டது. மாவட்டச் செயலாளர் பேசிய ஆடியோவை அனைவரும் கேட்டோம். இன்னும் ஓராண்டு தான் தேர்தலுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பவே மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. நிதிக்காக மத்திய அரசை அணுகுவதை விட்டு விட்டு போராட்டம் நடத்துவது தேவையற்றது. சீமான் பேசுவது நாகரீகம் அற்றது. அதை அவரிடம் இருக்கும் பெண்கள் எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. அநாகரீகமாக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.இந்த நிகழ்வின் போது தேனி வடக்கு மாவட்ட செயலாளர்கள் காசிமாயன் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story



