மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், கொடுவா மீன் குஞ்சுகளை கடலுக்குள் விடும் நிகழ்ச்சி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை கடலில் விட்டார். நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பழனிவேல், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, கடலில் உள்ள மீன் வளத்தை பெருக்க வேண்டும் என்ற வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ரூ.100 கோடியில் திட்டத்தை அறிவித்து, ஏற்கனவே செயற்கை பவளப்பாறை அமைக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில், லட்சக்கணக்கில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன., இந்த மீன் குஞ்சுகள் வளர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மல்லிப்பட்டினத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டம் மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 25 கடற்கரைகளில் செயல்படுத்தப்படும். மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கு, துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் ஏற்கனவே அறிவித்தபடி கடற்கரை முகத்துவாரங்களை தூர்வாரும் பணி வெகுவிரைவில் தொடங்கப்படும். மல்லிப்பட்டினம் பகுதியில் கடற் பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையிலும் கடல் வாழ் உயிரினங்கள், மீனவர்களை பாதிக்கக்கூடிய இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். ஆழ்கடல் மீன்பிடி சம்பந்தமாக மீனவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. எனவே, மீனவர்களுடன், மீன்வளத்துறை அலுவலர்கள் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இலங்கை கடற்படை பிடித்து செல்லப்படும் தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து, அப்போதைய மாநில அரசும், ஒன்றிய அரசும் தவறு செய்து விட்டதாக ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இலங்கை பிரச்சனை என்பது தமிழக அரசாங்கம் தலையிட்டு செய்ய வேண்டிய விஷயம் இல்லை. இது ஒன்றிய அரசு தலையிட வேண்டிய விஷயம். ஆளுநர் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் இருக்கிறார். , அவர் டெல்லிக்கு சென்று நேரடியாக பிரதமரையோ, வெளியுறவுத்துறை அமைச்சரையோ நேரில் சந்தித்து, இதற்கான தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர், அவர்கள் பல்வேறு வகையில் ஒன்றிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் இல்லை என்ற கருத்தில் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே, பாஜகவை சேர்ந்த பல தலைவர்கள் மீனவர்களை சந்தித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்கள். அந்த வகையில், கச்சத்தீவை மீட்டுத் தருவோம். இலங்கை அரசு பிடித்துச் சென்ற படகுகளை மீட்டுத் தருவோம் என்றெல்லாம் சொன்னார்கள். மீனவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான தீர்வை காணக்கூடிய ஒன்றிய அரசாங்கமாக அவர்கள் செயல்படவில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி அவர்கள் மீனவர்களை அழைத்துச் சென்று வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து மீனவர்கள் பிரச்சினை பற்றி கோரிக்கை விடுத்தனர். நாங்கள் அது சம்பந்தமாக பேசுகிறோம், பேசுகிறோம் என்று சொல்கிறார்களே தவிர, ஒன்றிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மீனவர்களை பற்றி ஒன்றிய அரசாங்கம் கவலைப்படவில்லை. ஆனால் மீனவர்கள் பறிகொடுத்த படகுகளுக்கான நிவாரணத்தை தமிழக அரசு வழங்கியது" என்றார். நிகழ்வில், மீன் வளத்துறை ஆணையர் கஜலட்சுமி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (உள்நாட்டு மீன்வளம்) கூடுதல் இயக்குனர் ஜி.ஆறுமுகம், மீன் வளத்துறை உதவி இயக்குநர் ந.மணிகண்டன், மீன் வள ஆய்வாளர்கள் வி.ஆனந்த், க.ந.வீரமணி மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

