நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில்

X
நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில், சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று கள ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர். நாகை மாவட்டத்தில், வேளாங்கண்ணி வெள்ளாற்றில் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக படகு சவாரியை அறிமுகப்படுத்த, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட இடத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் கிராமிய சுற்றுலாத் திட்டத்தில், உண்டி உறையுள், மிதிவண்டி பாதைகள், கைவினை பட்டறைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள், ஏரி முகப்பு மேம்பாடு மற்றும் படகு சவாரி, பூவை கடற்கரையில் மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி ஆகியவற்றிற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலினையில் உள்ளது. இத்திட்டத்திற்கான இடங்களை கள ஆய்வு செய்தார். வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றி சிமெண்ட சாலை அமைக்க ரூ.5.44 கோடி மதிப்பீட்டிலும், வேதாமிர்தம் ஏரியில் படகு சவாரிக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டிலும், வேதாரண்யம் நகராட்சியால் திட்டங்கள் தயாரிக்கப்பட்ட இடங்களையும், புகழ்ப்பெற்ற பறவைகள் சரணாலயமான கோடியக்காட்டில் சாலை மேம்பாடு, காட்சி கோபுரம், தொலை நோக்கி கருவியுடன் கூடிய பார்வையாளர் மாடம் மற்றும் வழிகாட்டி பலகைகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்த வனத்துறை ரூ.1 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரித்து வருவதனையும் சுற்றுலாத்துறை அமைச்சர் கள ஆய்வு செய்தார். மேலும், நாகையில் அமைந்துள்ள புரதான டச்சு கல்லறைக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.50 லட்சத்தில் அணுகு சாலை, கழிப்பறைகள், வழிகாட்டி பலகைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்வது குறித்தும், நாகை பழைய மற்றும் புதிய கடற்கரை பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் களஆய்வு செய்து நாகை நகராட்சி ரூ.80 லட்சத்தில் பழைய கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பொழுதுபோக்கிற்காக பூங்கா அமைக்க திட்டம் தயாரித்து வருவதையும், நாகூர் தர்காவை சுற்றி பேவர்பிளாக் அமைத்தல், இரு சக்கர வாகன நிறுத்துமிடம், யாத்திரிகள் காத்திருப்பு மண்டபம் மற்றும் பேருந்து நிலைய மேம்பாடு ஆகியவற்றுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் நாகை நகராட்சி திட்டங்கள் தயாரித்து வருவதனையும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வில், நாகை மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், நாகை நகராட்சி தலைவர் ரா.மாரிமுத்து, வேதாரண்யம் நகராட்சி தலைவர் மா.மீ.புகழேந்தி, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் அ.டாயானா ஷர்மிளா, வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழத்தின் திருச்சி மண்டல மேலாளர் பிரபுதாஸ், நாகை நகராட்சி ஆணையர் டி.லீனா சைமன், மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழத்தின் திருச்சிராப்பள்ளியின் உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல், பூம்புகார், சுற்றுலா அலுவலர் கஜேந்திரன், வேதாரண்யம் வட்டார ஆத்மா குழுத்தலைவர் என்.எஸ்.சதாசிவம், கல்வி குழு தலைவர் மேகநாதன், ஆத்மா திட்ட மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் உதயம் வே.முருகையன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

