அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

X
அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 1993 மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வினை வழங்க வேண்டும், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் இல்லையென்றால் சமூக நலத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், திட்டத்தில் நடைமுறை சாத்தியமற்ற வழிமுறையான கர்ப்பிணிகளுக்கு முகப்பாவனை பதிவு செய்து டி ஹெச் ஆர் வழங்கவேண்டும் என்ற முறையை கைவிட்டு திட்டத்தை வழக்கம்போல் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே ஏற்றுக் கொண்ட படி மே மாதம் விடுமுறையை ஒரு மாதம் வழங்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எஸ். கே. தியாகராஜன், அங்கன்வாடி சங்க மாவட்ட செயலாளர் எம். மனோன்மணி, மாநில துணைத்தலைவர் எம். சரோஜா, உள்ளிட்ட பலர் பேசினர். இதில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.
Next Story

