சேற்றில் சிக்கிய டிப்பா் லாரி சாய்ந்து சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

X
தஞ்சை அருகே வல்லம் - மருத்துவக் கல்லூரி சாலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளுக்காக வந்த டிப்பர் லாரி சேற்றில் சிக்கி காம்பவுண்ட் சுவர் மீது சாய்ந்ததால் இடிந்து விழுந்தது. தஞ்சை அருகே வல்லம் – மருத்துவக்கல்லூரி சாலையில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. வல்லம் – தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மேம்பாலத்திற்கு அருகில் மொத்தம் 969 வீடுகள் இந்த குடியிருப்பு வளாகத்தில் கட்டப்படுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளிகள் தங்கி பணி புரிந்து வருகின்றனர். கட்டிடம் இருக்கும் பகுதியை சுற்றி காம்பவுண்டு சுவர் புதிதாக கட்டப்பட்டுள்ளது . இந்நிலையில் வல்லம்- மருத்துவக்கல்லூரி சாலை ஓரத்தில் உள்ள பகுதியிலும் காம்பவுண்டு சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பணிகளுக்காக டிப்பர் லாரிகளில் செம்மண் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களாக வல்லம் பகுதியில் பெய்த மழையால் புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வளாகத்தின் உள்ளே சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் மண் ஏற்றி உள்ளே சென்ற லாரி ஒன்று சேற்றில் சிக்கி அருகில் கட்டப்பட்டு இருந்த காம்பவுண்ட் சுவற்றின் மீது சாய்ந்தது. இதில் காம்பவுண்டு சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. லாரி காம்பவுண்ட் சுவர் மீது சாய்ந்த போது அப்பகுதியில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு லாரி அப்புறப்படுத்தபட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

