பூதலூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு 

வளர்ச்சி பணிகள்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூதலூர் ஒன்றியம் புதுப்பட்டி கிராமத்தில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் வீடுகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வீராசாமி என்பவரது வீடு ரூ.1,05,000 மதிப்பிலும், கார்த்திகா என்பவரது வீடு ரூ.1,46,000 மதிப்பிலும், பால்ராஜ் ஆறுமுகம் என்பவரது வீடு ரூ.1,00,000 மதிப்பிலும், மாரியாயி, மணிமாறன் ஆகியோரது வீடுகள் இத்திட்டத்தின் கீழ் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, வீடுகள் சீரமைப்பு பணிகள் தரமான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செங்கிப்பட்டியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதையும், செங்கிப்பட்டி ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கல்வித் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், செங்கிப்பட்டி புதுக்குளத்தினை பார்வையிட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது குறித்தும், சமுதாயக் கிணறு புதுப்பிக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், செங்கிப்பட்டி அத்திவெட்டி சாலையில் சிறிய பாலம் ரூ.2.8 கோடி மதிப்பில் பணிகள் முடிவுற்றுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story