டால்மியா சிமென்ட் ஆலை நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

X
அரியலூர், மார்ச்..5 - அரியலூர் அடுத்த மணக்குடியில், ஓட்டக்கோயில் டால்மியா சிமென்ட் ஆலை நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர். அக்கட்சியின் மாவட்டச் செயலர் இளங்கோவன், சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி மற்றும் மணக்குடி கிராம மக்கள் அளித்த மனுவில், இங்குள்ள அரசுக்கு சொந்தமான ஏழரை ஏக்கர் நிலத்தை, காலனித் தெரு மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலையில், அந்த நிலத்தை ஓட்டக்கோவில் டால்மியா சிமென்ட் ஆலை நிர்வாகம் அடியாட்களைக் கொண்டு பொதுமக்களை மிரட்டி, அவர்களுக்கே தெரியாமல் அந்த நிலத்தை ஆக்கமிரத்து, வேலி அமைத்துள்ளனர். இதனை மீட்டு மீண்டும் பொதுமக்கள் விவசாயம் செய்திட ஆவணம் செய்ய வேண்டும். சுடுகாட்டுக்கு வேறு இடம் வழங்கக் கோரிக்கை....காலனித் தெரு மக்களுக்கு சொந்தமான சுடுகாடு, இடுகாடு, 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்ல வேண்டும் என்றால், அங்குள்ள ஓடையை கடந்து, செல்ல வேண்டும். மழைக்காலங்களில், இடுப்பளவு தண்ணீரில் சடலங்களைதூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சுடுகாட்டை வேறு இடத்துக்கு மாற்றித் தரவேண்டும். இல்லையென்றால் சுடுகாட்டுக்குச் செல்ல சாலை வசதியுடன் பாலம் அமைத்துத் தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

