காந்தி சிலை

X
ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அங்கு அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காந்தி முழு உருவ கான்கிரீட் சிலை உள்ளது. சாலை விரிவாக்க பணியின் போது இந்த சிலையையும் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கருங்கல்பாளையம் காவேரி சாலையில் 1970 -ம் ஆண்டு நிறுவப்பட்ட காந்தி சிலையை, அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் காந்தி சிலையை திறந்து வைத்தார். ஈரோட்டில் அடையாளமாக இந்த சிலை இருந்து வந்தது. இச்சிலையை இடமாற்றம் செய்வதில் குழப்பம் நிலவி வந்தது. இதையடுத்து அமைச்சர் முத்துசாமி மற்றும் திமுக.வினர், காங்கிரஸ் கட்சியினருடன் கலந்தாலோசித்து, தற்போதுள்ள சிலைக்கு பின்புறம் உள்ள இடத்தில் கீழே நூலகத்துடனும், மேல் பகுதியில் முழு உருவ காந்தி சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக நூலகத்துடன் கூடிய சிலை வைக்கும் பீடம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட இடத்தில் வெண்கலத்தினால் செய்யப்பட்ட முழு உருவ காந்தி சிலை நிறுவும் பணிகள் கிரேன் வாகன உதவியுடன் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சிலை நிறுவப்பட்டது. இந்த பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு செய்து, சிலை நிறுவும் பணி நிறைவடையும் வரை அங்கேயே இருந்தார். இந்த பணியின்போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ சந்திரகுமார்,, திமுக துணை செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கவுன்சிலர் ஈ.பி ரவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். விரைவில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைய காந்தி சிலை அகற்றப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story

