திருவட்டாறு :மாயமான பள்ளி மாணவிகள் சென்னையில் மீட்பு

X
குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ஆரமன்னம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகள் அஸ்மிதா (14) இவர் திருவரம்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகள் சுபினா (13). இவர் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு மாணவிகளும் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் பள்ளி செல்வதாக கூறி சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து திருவட்டாறு போலீசில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீசார் தனிப் படைகள் அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒரு தனிப்படை கேரளாவிலும், இன்னொரு தனிப்படை போலீசார் சென்னையில் தேடல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் தெரு வழியாக நடந்து செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வைரலானது. அதன் அடிப்படையில் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து நாகர்கோவில் பஸ் ஏறி சென்ற தெரியவந்தது. நாகர்கோவில் இருந்து எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாணவிகளை மீட்க சென்னை சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து மாணவிகள் சொந்த ஊருக்கு வந்த பிறகு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story

