பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை தள்ளிச் சென்ற மாணவர்கள்
Pallipalayam King 24x7 |5 March 2025 6:01 PM ISTஅரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் தேர்வு எழுத சென்ற மாணவ மாணவியர் அவதி அடைந்தனர்
ஈரோடு அரசு நகர பேருந்து( K1) ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு கருங்கல்பாளையம், பள்ளிபாளையம், கணபதிபாளையம்,சீராம் பாளையம் வழித்தடமாக கொண்டு குமாரபாளையம் வரை தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையம் அடுத்த ஒட்ட மெத்தை பேருந்து நிலையம் பகுதியில் பயணிகளை ஏற்ற அந்த பேருந்து வந்தபோது திடீரென நடுசாலையில் பழுதாகியது. இதனை அடுத்து பேருந்து ஓட்டுநர் எவ்வளவோ முயற்சித்தும் பேருந்த இயக்க முடியவில்லை. அதன் பின் நடத்துனர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி வந்து அப்பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த பள்ளி மாணவர்களை கொண்டு முன்பக்கமாக தள்ள வைத்து இயக்க முற்பட்டனர். ஆனாலும் பேருந்தை இயக்க முடியவில்லை. அதன்பின் பேருந்தின் பின்பக்கமாக மாணவர்களை கொண்டு சிறிது தூரம் தள்ள வைத்து ஸ்டார்ட் செய்த பின் வண்டியை இயக்கினர். கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அதே பேருந்தில் பயணித்தவர்கள் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களை கொண்டு இயக்க போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கோடை காலம் தொடங்கி உள்ளதால் பேருந்து நடு வழியில் நின்றால் இறங்கி தள்ளுவதற்கு பேருந்தில் பயணிக்கும் பயணிகளால் முடியாது. ஈரோட்டில் இருந்து குமாரபாளையம் வருகை செல்லும் இப்பேருந்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணித்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story


