மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தையல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள்

X
பெரம்பலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் அரசு திட்டங்களின் மூலம் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது – சார் ஆட்சியர் சு.கோகுல் தகவல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட கீழப்புலியூரில் இயங்கிவரும் நெஸ்ட் (NEWLIFE ENLIGHTEMENT AND SEVA TRUST) பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தையல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவதை சார் ஆட்சியர் சு.கோகுல் இன்று (05.03.2025) நேரில் பார்வையிட்டார். பின்னர் சார் ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது மாற்றுத்திறனாளிகள் நலனில் தனிக்கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், அரசு உதவியுடன் குன்னம் வட்டத்திற்குட்ட கீழப்புலியூரில் நெஸ்ட் எனும் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சியினை இயங்கி வருகின்றது. இங்கு தையல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில், லெதர் செக்டார் ஸ்கில் கவுன்சில் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியின் மூலம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கிவரும் கோத்தாரி பீனிக்ஸ் காலணி தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கிட அந்த நிறுவனத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் முதற்கட்டமாக தற்போது 40 நபர்களுக்கு லெதர் செக்டார் ஸ்கில் கவுன்சில் உதவியுடன் பயிற்சி வழங்கப்படுகின்றது. வேலைவாய்ப்பு பெற ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வின்போது குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், நெஸ்ட் பயிற்சி நிறுவன திறன் மேம்பாட்டு அலுவலர் தினகரன், பயிற்சி மைய இயக்குநர் கோ.லாவண்யாநீதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story

