காங்கேயம் அருகே விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம் - வனத்துறையினர் ஆய்வு 

காங்கேயம் அருகே விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம் - வனத்துறையினர் ஆய்வு 
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பரஞ்சேர்வழி கிராமத்திற்கு உட்பட்ட தோட்டம் ஒன்றில் சிறுத்தை இருந்ததை பார்த்த விவசாயி தங்கராஜ் கூச்சலிட்டு உள்ளார். அங்கிருந்து சிறுத்தை காடுகளுக்குள் தப்பி ஓடியது.வனத்துறையினர் இன்று ஆய்வு செய்தனர். இதை அறிந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். 
காங்கேயம் திட்டுப்பாறை அடுத்துள்ளது பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கொரங்கட்டு தோட்டம். இந்த தோட்டத்தின் உரிமையாளர் தங்கராஜ் (46) விவசாயம் செய்து கொண்டு உள்ளார். இந்த தோட்டத்தில் நேற்று மாலை தண்ணீர் இறைக்கும் மோட்டாரை நிறுத்திவிட்டு வருவதற்கு தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தின் கிணத்து மேடு பகுதியில் ஒரு பெரிய வகை சிறுத்தை இருந்துள்ளதை பார்த்து கூச்சலிட்டு உள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் வருவதற்குள் அங்கிருந்த சிறுத்தை அதிவேகமாக தாண்டி குதித்து அருகே உள்ள தப்பி ஓடியது.பின்னர் இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த வனத்துறை காவலர்கள் சுகன்யா,நாகராஜ் ஆகியோர் தோட்டத்தில் சிறுத்தையின் கால் தடம்  ஏதாவது பதிந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடந்த வாரத்தில் இதன் அருகே உள்ள கிராமத்தில் சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற சம்பவம் அரங்கேறிய நிலையில் தற்போது காங்கேயம் பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஒரு ஆண்டுகளில் காங்கேயம் பகுதிகளில் நாய்கள்,வெறி நாய்கள் கடித்து 1000 ஆடுகளுக்கு மேல் பலியாகியது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வரும் வேளையில் தற்போது சிறுத்தையும் இப்பகுதியில் உள்ளது என்பதை அறிந்து வேதனை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் ஆட்டுக்குட்டிகள்,மாட்டுக்கன்றுகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விவசாயிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story