விவசாயியை ஒருமையில் பேசி அடித்த வழக்கு ஒரத்தநாடு எஸ்.ஐக்கு பிடி வாரண்ட் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு

X
தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம். விவசாயி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் வங்கியில் பணிபுரியும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் மற்றும் ஊழியர்கள் நித்தியானந்தத்திற்கு கடன் தர மறுத்து விட்டனர். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து மரூர் காவல் நிலையத்தில் நித்தியானந்தம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அப்போது பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் வேம்பு என்பவர் விசாரித்தார். விசாரணையில் கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கு சாதகமாக வேம்பு செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விவசாயி நித்தியானந்தத்தை தகாத வார்த்தைகளால் உதவி ஆய்வாளர் வேம்பு திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தியானந்தம் திருவையாறு நீதிமன்றத்தில் உதவி ஆய்வாளர் வேம்பு மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு தஞ்சை மாவட்ட மனித உரிமைகள் மீறல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் சார்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் (மனித உரிமைகள் மீறல்) விவியன் அசோக் ஆஜாரானார். இந்த வழக்கை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் விசாரித்தார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் வேம்பு மட்டும் வழக்கில் ஆஜராகவில்லை. இதனால் வேம்புக்கு பிடி வாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். தற்போது வேம்பு ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

