சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம்

X
தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் செய்யப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்தவா் கே. குரு மாணிக்கம் (55). இவா், தஞ்சாவூா் குழந்தை கடத்தல் தடுப்பு காவல் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் யாகப்பா நகா் அருகே மாா்ச் 3-ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, தலைச்சுற்றல் காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதனால், பலத்த காயமடைந்த குரு மாணிக்கம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு இவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டது. இவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினா்கள் முன் வந்தனா். இதைத்தொடா்ந்து, புதன்கிழமை அறுவை சிகிச்சை மூலம் இவரது கண், தோல் தானமாகப் பெறப்பட்டன. பின்னா், கண் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கும், தோல் மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னா், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குரு மாணிக்கத்துக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.
Next Story

