வங்கிக் கணக்கிலிருந்து பணம் கையாடல் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூரில் ஒரே நேரத்தில் 40க்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி ஐ வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் தாராபுரம் சாலை புதூர் பிரிவு கிளை பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ள 40க்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்கில் இருந்து நேற்று மாலை ஒரே நேரத்தில் 10 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டு மைனஸ் தொகை காட்டப்படுவதாகவும் காலை 10 மணிக்கு வங்கிக்கு வந்து முறையிட்ட நிலையில் வங்கியில் அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏராளமானோர் வங்கி முன்பு குவிந்ததால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வங்கிக்கு வந்து பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கி நிறுவனம் என்பதால் தவறுதலாகவோ அல்லது முறைகேடாகவோ பணம் எடுக்கப்படாது எனவும் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது அல்லது கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் தொகையை திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்ட காலத்தில் செக் பவுன்ஸ் உள்ளிட்டவைகளுக்கான தொகை தற்போது எடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தனர் ஒவ்வொரு நபரின் கணக்காக ஆய்வு செய்து எதற்காக பணம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் நீண்ட நாட்களாக பணம் இல்லாமல் திடீரென பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில் உடனடியாக அந்த பணம் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் ஆய்வு செய்து பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் வழங்கப்படும் எனவும் தவறுதலாக பணம் எடுக்கப்பட்டிருந்தால் அவற்றை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வங்கியின் மேலாளர் தெரிவித்தார். எனினும் இன்று மாத தவணை செலுத்த வேண்டிய நாள் பல்வேறு மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகள் உள்ள நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணம் திடீரென எடுத்ததால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
Next Story