வாரச்சந்தை கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவர எம்.எல்.ஏ. கோரிக்கை!

X
அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் கிராமத்தில் வளர்புரம் சாலையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தைக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த நிலையில் சு.ரவி எம்.எல்.ஏ. வாரச்சந்தை கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த சாலை வழியாக உளியம் பாக்கம், கீழாந்தூர், பள்ளியாங்குப்பம், வளர்புரம், பெருங்களத் தூர் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். சந்தையின் போது வாகனங்கள், கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் செல்வதற்கு சிரமமாக இருப்பதால் வாரச்சந்தைக்கு தனியாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பொது மக்களுக்கு இடையூறாக சாலையிலேயே வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. வாரச்சந்தை கட்டிடம் மது பிரியர்களின் கூடாரமாக செயல்பட்டு வருகிறது. எனவே அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அ.தி.மு.க. சார்பில் பகுதியில் போராட்டம் நடைபெறும் என்றார். அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story

