ஜக்ஜித் சிங் போராட்டத்தை ஆதரித்து தஞ்சாவூரில் உண்ணாவிரதம்

ஜக்ஜித் சிங் போராட்டத்தை ஆதரித்து தஞ்சாவூரில் உண்ணாவிரதம்
X
உண்ணாவிரதம்
நீதிபதி நவாப் சிங் குழுப் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் } ஹரியானா எல்லையான கனூரி பார்டரில் சம்யுக்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்லேவால் மேற்கொள்ளும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அமைப்பின் தமிழகத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இப்போராட்டத்தைத் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன் தெரிவித்தது: மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. உண்ணாவிரதப் போராட்டத்தை 100 ஆவது நாளாக தொடரும் ஜக்ஜித்சிங் டல்லேவால் உயிரை பாதுகாக்க மத்திய அரசு முன்வராதது வேதனையளிக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு பெயரளவில் விவசாயிகளுடன் 2 முறை கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தியதே தவிர, இதுவரையிலும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தைக் கொண்டு வருவதற்கோ, கடன் முழுவதும் தள்ளுபடி செய்வதற்கோ எந்தவித உத்தரவாதமும் அளிக்க முன்வராதது ஏமாற்றமளிக்கிறது. அடுத்து மார்ச் 19 ஆம் தேதி மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. அக்கூட்டத்தில் விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பளித்தும், ஜக்ஜித் சிங் டல்லேவால் உயிரைப் பாதுகாப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்றனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர். திருப்பதி வாண்டையார், மண்டலத் தலைவர்கள் ஏ.எஸ். பாபு, மாணிக்கவாசகம், துரை. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story