சேலம் மத்திய சிறையில் பணியாற்றிய உதவி சிறை அலுவலரை பணி இடைநீக்கம்

சேலம் மத்திய சிறையில் பணியாற்றிய உதவி சிறை அலுவலரை பணி இடைநீக்கம்
X
கண்காணிப்பாளர் வினோத் அதிரடி நடவடிக்கை
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள காவிரிபாலம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (வயது 28). இவரிடம் கடந்த 4-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.700 பறித்தார். இதுதொடர்பாக பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் சீத்தாமலைதொடர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி செல்வதற்காக ஓடினார். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததில் அவருடைய இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பாதுகாப்பு அறையில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே ராமச்சந்திரனை மத்திய சிறை கணக்கிற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு போலீசார் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சிறை கணக்கிற்கு எடுத்து கொள்வதற்காக அவரிடம் விசாரணை நடத்த உதவி சிறை அலுவலர் ரிஷிகேஷ் வைகுந்சிங் என்பவர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவர் ராமச்சந்திரனிடம், உன்னை போலீசார் தான் தாக்கியதாக கூறினால் நிவாரண உதவி பெற்று தருகிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை கவனித்த போலீசார் இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம் புகார் தெரிவித்தனர். அதாவது, போலீசாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கைதியிடம் தவறான கருத்தை கூறிய உதவி சிறை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். இதையடுத்து உதவி சிறை அலுவலர் ரிஷிகேஷ் வைகுந்சிங்கை பணி இடைநீக்கம் செய்து கண்காணிப்பாளர் வினோத் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
Next Story