சேலத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

X
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் ஆதிசெல்வன் தெருவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது குறித்து கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாநகராட்சியில் 8½ லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம், தனி குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் மூலம், மாநகராட்சி பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 135 மில்லி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 2 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 3 முதல் 7 நாள்களுக்கு ஒருமுறை பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் குழாய் உடைப்பை விரைவில் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநகராட்சிக்கு என ரூ.750 கோடியில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் திட்டம் நிறைவேற்ற டெண்டர் விடப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போது குடிநீர் குழாய் பழுது ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கோடை காலம் தொடங்கி உள்ளது. எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதற்காக தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story

