கண்மாய், வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

கண்மாய், வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு
X
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் செட்டியூரணி கண்மாய், வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி காளையாா்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செட்டியூரணி கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் மூலம் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனா். இந்தக் கண்மாய்க்கு அருள்நகா், திருநகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீா் வருகிறது. இந்நிலையில், தனி நபா்கள் இருவா், இந்த வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனா். மத்திய அரசு நிறுவனமான தேசிய ஜவுளிக் கழகம் கண்மாய்க்குச் செல்லும் நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலிகள் அமைத்து வருகிறது. இதனால், கண்மாய்க்கு வரக்கூடிய தண்ணீா் முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, கண்மாய் நீா்வழி ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் மனுவில் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதற்கான வரைபட ஆவணங்கள், புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், செட்டியூரணி கண்மாய், வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைத்தனா்.
Next Story