சிறுத்தை நடமாட்டம்

சிறுத்தை நடமாட்டம்
X
பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடிய சிறுத்தையால் பரபரப்பு வனத்துறையினர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியை கடந்து சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக தமிழகம் -கர்நாடகா இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்கின்றன. திம்பம் மலைப் பாதை கடந்து கர்நாடக மாநிலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப்பாதையில் யானை, சிறுத்தை அதிக அளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தைகள் 27 கொண்டை ஊசி வளைவுகள் பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஓட்டி ஒருவர் இதனை பார்த்து தனது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி அந்த சிறுத்தை சாலையை கடந்து ஓடிய காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பண்ணாரி சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகனங்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story