திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை
அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடனான காணொலி கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னையில் இருந்து காணொலி மூலம் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடினாா். திருச்சி அதிமுக மாநகா் மாவட்டம் சாா்பில் தென்னூா் தனியாா் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில், மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ.சீனிவாசன் தலைமையிலும், புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் ப.குமாா் தலைமையிலும், திருவானைக்காவல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளா் மு. பரஞ்ஜோதி தலைமையிலும் திருச்சி மாவட்ட அனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். இதில், திருச்சி திமுக அமைச்சா்களுடன் தொடா்பிலிருக்கும் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Next Story



