கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தென்னடார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி ஆண்டுவிழா, விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மகளிர் தின விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சத்யராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்புவேலன், தேவி செந்தில், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாணவ, மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவிகளை, வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கி, நாகை மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் உதயம் முருகையன் பேசியதாவது இப்பள்ளியில், புதிதாக 13 மாணவர்களை முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர். மேலும், பள்ளிக்கு தேவையான பல்வேறு பொருட்களை பள்ளிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். நகர்புற பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு, தற்போது நமது கிராமப்புற பள்ளிகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளியில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் என பல தரப்பினர் பள்ளிக்கு போட்டி போட்டு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அரசுக்கு உறுதுணையாக நாமும் செயல்பட்டு, பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடுவோம். மேலும், கல்வி வளர்ச்சியில் இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம் வகிக்கிறது. அதனை முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கு தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் ஒத்துழைப்போடு பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேகா ஜெயக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் குழந்தைவேல், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் பார்த்தசாரதி, அரசு மணி, திருமாவளவன், பாலசுப்பிரமணியன், கருணாநிதி, முருகானந்தம், அரிமா சங்க தலைவர் செந்தில்நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில், பள்ளி ஆசிரியை திலகா நன்றி கூறினார்.
Next Story

