பொள்ளாச்சி: பாரம்பரியத்தை பறைசாற்றிய புதுமணத் தம்பதியினர்!

பொள்ளாச்சி: பாரம்பரியத்தை பறைசாற்றிய புதுமணத் தம்பதியினர்!
X
பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் சென்றது வைரலாகி வருகிறது.
கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியரின் மகன் சஞ்சய் வினித் மற்றும் கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகள் தாரணி ஆகியோரது திருமணம் நேற்று கோவை கண்ணாம்பாளையம் பழனி ஆண்டவர் திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதியினர் சொகுசு காரில் செல்லாமல், பாரம்பரியத்தை போற்றும் விதமாக மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றனர். பட்டு வேட்டி, பட்டு சேலையில் மணக்கோலத்தில் புதுமணத் தம்பதியினர் மாட்டு வண்டியில் பயணித்ததை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், பலரும் தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து புதுமாப்பிள்ளை சஞ்சய் வினித் கூறுகையில், நான் ஒரு விவசாயி. நமது பாரம்பரியத்தை போற்றும் வகையில், மாட்டு வண்டியில் செல்ல வேண்டும் என விரும்பினேன். எனது விருப்பத்தை ஏற்று எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு வழங்கினர். எனவே, காரில் செல்வதை விட மாட்டு வண்டியில் சென்றது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இந்த பயணம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார். புதுமணத் தம்பதியினரின் இந்த பாரம்பரிய பயணம், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இது சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
Next Story