கோவை: சீரகம் ஏற்றி வந்த லாரி சிக்கி போக்குவரத்து நெரிசல்!

X
கோவை, லங்கா கார்னர் பகுதியில் நேற்று நள்ளிரவு லாரி சிக்கியதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளியூரில் இருந்து வந்த லாரி ரயில்வே பாலம் நிர்ணயித்த உயரத்தை விட அதிக உயரத்தில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன், லாரி மீது சரிந்த ராட்சத தடுப்பு கம்பத்தை ஒழுங்குபடுத்தி, குஜராத் மாநிலத்தில் இருந்து சீரகம் ஏற்றி வந்த லாரி விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. சாலை போக்குவரத்திற்கு வரும் கனரக வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க உரிய விழிப்புணர்வுகளை அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சரக்கு வாகனங்கள் புறவழிச் சாலையைப் பயன்படுத்திச் செல்ல வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், இதுபோன்று நள்ளிரவு நேரங்களில் நேரத்தை மிச்சப்படுத்த லாரிகள் உள்ளே வருவதால் மீண்டும் மீண்டும் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் டேங்கர் லாரி ஒன்று இதேபோன்று மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Next Story

