இயன்முறை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

X
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் (பதிவு: 424/2020) சார்பில் தமிழ்நாடு மாநில பேரவை கூட்டம், தஞ்சை மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மரு.ஆர்.ராதா கிருஷ்ணன் தலைமையேற்றார். பேரவையை துவக்கி வைத்து, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் சிறப்புரையாற்றினார். சிஐடியு முறைசாரா சங்கம் மாவட்டச் செயலாளர் பி.என். பேர் நீதியாழ்வார், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, மருந்து விற்பனை பிரதிநிதி சங்க மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாடு இயன்முறை மருத்துவர் சங்க கோரிக்கைகளை முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், இதனை அடிப்படையாகக் கொண்டு 2019 ஆம் ஆண்டு முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இயன்முறை மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக மருத்துவர்களாக பணியமர்த்தப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மிகக் குறைவான ஊதியத்தில் பணிபுரியும் இயன் முறை மருத்துவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பேர் வரை தற்காலிகமாக எந்த சட்டச் சலுகையும் இல்லாமல் இயன்முறை மருத்துவர்களாக பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய இவர்களுக்கு தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களாகப் பணி புரியும் இயன்முறை மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். பணி வரன்முறை உறுதிப்படுத்தப்பட வேண்டும். படிப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ற வகையில் ஊதியத்தை வழங்க வேண்டும். தமிழகத்தில் இயன்முறை மருத்துவர்களுக்கான NCAHP Act'2021 ஐ, உடனடியாக அமல்படுத்த வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரு.வீர சிவா, மாநில நிர்வாகிகள் மரு. மோகன்ராஜ், மரு. இளையராஜா, மரு. சத்தியபாமா மரு.துர்காதேவி, மரு.ரம்யா, மரு. மெர்சி ஆரோக்கிய சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மரு. துரைமுருகன் நன்றி கூறினார்.
Next Story

