பெருமாள் கோயிலில் ராஜகோபுர கல்வாசற்கால் பிரதிஷ்டை விழா

பெருமாள் கோயிலில் ராஜகோபுர கல்வாசற்கால் பிரதிஷ்டை விழா
X
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் ராஜகோபுர கல்வாசற்கால் பிரதிஷ்டை விழா வில் கிரேன் மூலம் நிலை நிறுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆரணி, ஆரணி அடுத்த கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ராஜகோபுரத்திற்கு கல் வாசற்கால் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ஆரணி அடுத்த கண்ணமங்கலம் நகரின் மையப்பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட புராதான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் கட்டடங்கள் சிதிலமடைந்து இருந்ததால், பழைய கட்டடங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு முழுவதும் புதியதாக கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை ராஜகோபுரத்திற்கு கல்வாசற்கால் பிரதிஷ்டை விழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி கருங்கல்லால் ஆன நான்கு பிரமாண்டமான ராஜகோபுர தூண்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கிரேன் மூலம் தூக்கி ராஜகோபுர வாசலில் நிலைநிறுத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், அறங்காவலர் குழு தலைவர்கள் கோவர்த்தனன், பாண்டியன், பொன்னம்பலம், வாசகர் வட்ட தலைவர் பி.சி.கார்த்திகேயன், கவுன்சிலர்கள், வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் பண்டைய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது போல முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story