போலீஸ் விசாரணை

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமராயனூரை சேர்ந்தவர் பசுவராஜ் (35). பெயிண்டர். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. மனைவி பேபி சித்ரா (31). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தில் தந்தை வீட்டில் மகனுடன் பேபி சித்ரா வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பசுவராஜ் சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு வந்தார். பின்னர் அவர் மகனை பார்ப்பதற்காக ராஜாஜிபுரம் சென்றுள்ளார். ஆனால் மகனை அவரிடம் காட்டாமல் நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்குமாறு பேபி சித்ரா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பசுவராஜ் அங்கிருந்து மன வேதனையுடன் கொங்காலம்மன் கோவில் பகுதிக்கு சென்றார். ராஜாஜிபுரம் நேர் எதிரே பழைய ஸ்டார் தியேட்டர் முன்பகுதியில் திடீரென சாலையில் விழுந்தார். அப்போது மூச்சுப் பேச்சு இன்றி இருந்ததால் அப்பகுதி மக்கள் கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது பசுவராஜ் இறந்து விட்டது உறுதியானது. இதனால் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பசுவராஜின் சகோதரி தனது அண்ணன் சார்பில் மரணம் இருப்பதாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கருங்கப்பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் பசுவராஜ் எவ்வாறு இறந்தார்? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story

