குண்டத் திருவிழா

தாளவாடி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கொங்கஹள்ளி ஸ்ரீ மல்லிகார்ஜூனா சுவாமி கோவில் திருவிழா பூசாரி மட்டும் குண்டம் இறங்கினார்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள கொங்கஹள்ளி என்ற வனத்தில் மூன்று மலைகளுக்கு நடுவே பாறை குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜூன சுவாமி கோவில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில் 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் குண்டம் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நேற்று முன்தினம் மாலை ருத்திராப்பிஷேக பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத்தோப்பில் இருந்து மேள தாளத்துடன் சுவாமி ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் பெண்கள் 2 கி.மீ தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாறை குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளதால் லிங்கத்துக்கு சிறப்பு பூஜை,வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆராவாரத்துடன் பூசாரி மட்டும் குண்டம் இறங்கினார். பூசாரியை தவிர பக்தர்கள் எவரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் ஆண் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் மல்லிகார்ஜூன சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 5000 - க்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். முனிவர் அவதாரத்தில் வரும் சுவாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தனத்தோப்பில் வந்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story