கோவை: நான்கு வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு !

கோவை: நான்கு வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு !
X
குரும்பபாளையம் முதல் சக்தி பன்னாரி வரை புதிதாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு.
கோவை-சத்தியமங்கலம் இடையே ஏற்கனவே இரண்டு வழிச்சாலை உள்ள நிலையில், தற்போது கோவில்பாளையம் கணேசபுரம், கரியாம்பாளையம், அன்னூர் தெற்கு, பசூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குரும்பபாளையம் முதல் சக்தி பன்னாரி வரை புதிதாக சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். குரும்பபாளையம் முதல் பன்னாரி வரை இரண்டு வழிச்சாலை உள்ள நிலையில், அதனை விரிவுபடுத்த போதிய இடங்கள் சாலையை ஒட்டியே உள்ளன. இருந்தும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சுமார் 2000 கோடி செலவழித்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக அந்த இடத்திற்கு வந்து பார்வையிட உள்ளதாக தெரிவித்தார். புதிதாக போடப்பட்ட திட்டம் அவசியமற்றது என்றும், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தற்போதுள்ள சாலையையே விரிவாக்கம் செய்யலாம் என்றும், தேவைப்படும் பட்சத்தில் ஆங்காங்கே உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கலாம் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
Next Story