ஜப்பான் சிவனடியார்கள் கிளார் கோவிலில் சிறப்பு யாகம்

X

காஞ்சிபுரம் அடுத்த கிளாரில் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியம் தலைமையில், சிறப்பு யாகம் நடைபெற்றது
காஞ்சிபுரம் அடுத்த கிளாரில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் என அழைக்கப்படும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபட்ட அறம்வளர்நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அகத்திய முனிவர், தன் மனைவி உலோபமுத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் சிறப்பு பற்றி அறிந்த, ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்த தொழிலதிபர் கோபாலப்பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில், 44 சிவனடியார்கள் இக்கோவிலுக்கு நேற்று வந்தனர். உலக நன்மைக்காக அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர யாகம் நடத்தி, மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இவர்களுடன் பழனி புலிப்பாணிச் சித்தர் ஆசிரமத்தின் நிர்வாகி கவுதம் கார்த்திக் மற்றும் பத்மா மகேஷ் ஆகியோர் உடன் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தினர். அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ய வந்தது குறித்து, ஜப்பான் நாட்டு தொழிலதிபர் கோபாலப்பிள்ளை சுப்பிரமணியம் கூறியதாவது: சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உளள சிவாலயங்களுக்கு சென்று தரிசித்தோம். எங்களுக்கு சித்தர்கள் மீதும், தமிழ்மொழியின் மீதும் மிகுந்த பற்று உண்டு. அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்த கோவில் மற்றும் 3,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதை அறிந்தோம். இதனால், இங்கு வந்து அகத்தீஸ்வரரை வழிபட்டோம். உலக நன்மைக்காக ருத்ர யாகமும் நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story