கோவை: அரங்கநாதர் கோவில்- திருக்கல்யாண உற்சவம் !
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மாசி மகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மகத் திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருக்கல்யாண விழா தொடங்கியது. திருமலை நல்லான் சக்கரவர்த்தி பாலாஜி சுவாமிகள், வேத வியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் மற்றும் கோவில் தலைமை அர்ச்சகர் சுரேஷ் நாராயணன் அய்யங்கார் ஆகியோர் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருக்கல்யாண திருமாங்கல்யம் அணிவித்தார்.திருக்கல்யாண நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் எம்.கே.கே.வி.தேவ்ஆனந்த், அறங்காவலர்கள் எம்.எம்.ராமசாமி, சு.சுஜாதா ஜவகர், கார்த்திகேயன், குணசேகரன், கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், காரமடை எஸ்.வி.ஜி.வி. பள்ளி நிர்வாக அதிகாரி சிவசதீஷ்குமார் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம், மஞ்சள், தாலி கயிறு ஆகியவை வழங்கப்பட்டன.
Next Story



