மத்திய கல்வி அமைச்சருக்கு முத்​தரசன், வீரமணி கண்​டனம்

மத்திய கல்வி அமைச்சருக்கு முத்​தரசன், வீரமணி கண்​டனம்
X
தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் தொடர்ந்து இவ்வாறு தரம் தாழ்ந்து பேசினால் தமிழகம் அமைதி கொள்ளாது எனவும் எச்சரித்துள்ளனர்.
இரா.முத்தரசன்: புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித் துறைக்கு, சட்டபூர்வமாக வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் முறையாக பதிலளிக்காமல், தமிழர்களையும் தமிழகத்தை இழிவுபடுத்தி தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். தர்மேந்திர பிரதான் பல நேரங்களில் தமிழ் மக்களையும், தமிழகத்தையும் சிறுமைப்படுத்தி பேசி வருகிறார். இந்தச் செயல் தொடருமானால் தமிழகம் அமைதி கொள்ளாது என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். அமைச்சரின் ஆணவப் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். கி.வீரமணி: தமிழக கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியை தராமல் ஆணவத்துடன் நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருக்கும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையொப்பமிட விரும்பியதாக தொடர்ந்து ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார். மேலும் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் பண்பற்றது. தமிழர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் செயலாகும். பேசுவதை பேசிவிட்டு பின் மன்னிப்பு என்ற பதுங்கு குழிக்குள் படுத்துக்கொள்வதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். பாஜகவின் ஆணவப் போக்குக்கு உரிய பதிலைத் தமிழக மக்கள் நிச்சயம் தருவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story