அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள்

அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள்
X
சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. இதை மலைக் குன்றின் மீது அமர்ந்து பெண்கள், சிறுவர்கள் ரசித்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது குன்றக்குடி ஆதீன மடத்துக்கு உட்பட்ட பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. 5 நிலை நாட்டார்களுக்கு உட்பட்ட இந்த கோயிலில், ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சுவிரட்டு நடக்கிறது. இதனை முல்லைமங்கலம், சதுர்வேத மங்கலம், கண்ணமங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் ஆகிய 5 நிலை நாட்டார்கள் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். கோயிலில் சிறப்பு வழிபாடு முடிந்து, மஞ்சு விரட்டு திடலுக்கு நாட்டார்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தியதும். மற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டுகள் அணிவித்தனர். தொடர்ந்து தொழுவில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். கொட்டிய மழையிலும் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். மலைக்குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மஞ்சு விரட்டை ரசித்தனர். முன்னதாக, ஆங்காங்கே வயல்வெளிகளில் கட்டு மாடுகளாக 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 53 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 7 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் தலைமையிலான அதிகாரிகள் ஏற்பாடுகளை கண்காணித்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story