கோவை: தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப் வைத்த இருவர் கைது !

X
கோவை சிங்காநல்லூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப் வைத்த இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். கோவை, சிங்காநல்லூர் ரயில் நிலையம் அருகே இருகூர் - பீளமேடு ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 10-ம் தேதி இரவு 10.15 மணிக்கு திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அப்போது தண்டவாளத்தில் பெரிய அளவிலான சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிமெண்ட் சிலாப்பை அகற்றினர். இந்த சம்பவத்தில், ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (48) மற்றும் அவரது நண்பர் விஜய் (34) ஆகியோரை நேற்று கைது செய்தனர். மதுபோதையில் சிமெண்ட் சிலாப்பை வைத்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர்.இருப்பினும், அவர்கள் பின்னணியில் வேறு ஏதாவது சதி திட்டம் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story

