வேதாரண்யம் அரசு கலை- அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தமிழ் மாணவர் மன்றம் சார்பில், பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறை மூலம் ஆண்டுதோறும் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றை கல்லூரியில் நடத்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்க வேண்டும் என ரூ.5 லட்சம் வைப்பு நிதி வைத்து ஆண்டுதோறும் விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2-வது ஆண்டாக பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், தமிழ்துறை தலைவர் குமரேசமூர்த்தி வரவேற்றார். போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், வேதாரண்யம் வர்த்த சங்க இணை செயலாளர் தங்கதுரை, தேசிய நல்லாசிரியர் செல்வராசு, கல்லூரி பேராசிரியர்கள் மாதவன், பிரபாகரன், செந்தில்குமார், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்த் துறை பேராசிரியர் ராஜ் நன்றி கூறினார்.
Next Story