முறையான மழை நீர் வடிகால் கேட்டு சாலை மறியல்

முறையான மழை நீர் வடிகால் கேட்டு சாலை மறியல்
. திருச்செங்கோடு மலை சார்ந்த பகுதியாக இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நகரத்தின் மேடான பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய நீர், மழை நீர் வடிகால்கள் வழியாக அந்தந்த பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளுக்கு வந்து சேரும் நிலை உள்ளது. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குள் மற்ற பகுதிகளின் மழை நீரோ பொதுமக்கள் பயன்படுத்திய நீரோ வரக்கூடாது என ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்துவதால்சாதாரண மழைக்கே மழைநீர் பொதுமக்கள் பயன்படுத்திய நீருடன்சேர்ந்து ஊருக்குள் வந்துவிடுகிறது. இந்தப் பிரச்சினையை சீரமைக்க நகராட்சி சார்பில் மேடான பகுதிகளில் இருந்து ஊருக்குள் தண்ணீர் செல்லாமல் மழைநீர் வடிகால்கள் வழியாக தாழ்வான ஏரி பகுதிகளுக்குள் செல்லவும் கழிவு நீரை அந்தந்த பகுதியில் சுத்திகரிப்பு செய்து மழைநீர் வடிகால் வழியாகஏரிகளுக்கு செல்லவும் திட்டம் வகுக்கப் பட்டு செயல்படுத்த முயற்சி செய்யும் போதுஅந்தந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணிகள் பாதியில் நின்று போய் உள்ளது. இதன் காரணமாக நேற்றும் நேற்று முன்தினமும் பெய்த சுமார் 12 மில்லி மீட்டர் மலைக்கு மேடான பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பாம்புகள், செத்து மிதக்கும் நாய்கள் ( குப்பை கூளங்கள் ஊருக்குள் வந்து விட்டது எனக் கூறி சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் ஈரோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வெங்கட்ராமன், நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வெளிப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் பகுதி மக்கள் பயன்படுத்திய கழிவு நீர் சூரியம்பாளையம் பகுதி வழியாக செல்லாமல் தடுப்பதாகஉறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஒவ்வொருவரும் தங்களது பகுதிக்கு வேறொரு பகுதியில் இருந்து மழை நீரோ கழிவு நீரோ வடிகால்கள் மூலம் செல்லக்கூடாது எனக் கூறுவதால் நகராட்சி நிர்வாகத்தினர் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகின்றனர். மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதி நோக்கி குறிப்பாக ஏரி பகுதியை நோக்கி தான் மழை நீரோ கழிவு நீரோ செல்ல வேண்டி உள்ளது ஏரியில் கழிவுநீர் கலக்க கூடாது என்பதால் தான் நகராட்சி சார்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் நகராட்சி நிர்வாகம் தடுமாறுகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வெளியேறும் மழை நீரோ கழிவு நீரோ அந்தந்த பகுதியிலேயே தேக்கி வைக்கப்பட்டால் பொது சுகாதாரத்தை பேணுவது எப்படி என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார் என்பவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது மழை நீர் மட்டும் செல்லும் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.சிலர் நமக்கு நாமே திட்டம் என்கிற பெயரில் இப்பொழுது மழைநீர் வடிகால் அமைக்கிறோம் என்கிற பெயரில் கழிவு நீரும் கலந்து வருவதால் இதனை தடுக்க வேண்டும் என நாங்கள் கூறி வருகிறோம். அதனால் தற்போது பெய்த மழையில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் தொட்டிகளில் கழிவு நீரும் கலந்துவிடுகிறது எங்களுக்கு இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது இதற்கு உரிய தீர்வை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
Next Story