நாமக்கல் தேசிய பசுமை படை அமைப்பு சார்பாக நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் சமுதாய தூய்மை பணி!

மாநகராட்சி மேயர் கலாநிதி, சுகாதார அலுவலர் திருமூர்த்தி,தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், மாநகராட்சி 2-வது வார்டு உறுப்பினர் சங்கீதா ஆகியோர் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் துணியாலான மஞ்சப்பைகள் புதிய பேருந்து நிலையத்தில் வழங்கினார்கள்
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஆதரவுடன், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை,மாவட்ட தேசிய பசுமை படை, சார்பில் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் சமுதாயத் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி,நாமக்கல் பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட கல்வி அலுவலர்கள் பச்சமுத்து (தொடக்கக்கல்வி )மற்றும் ஜோதி (மெட்ரிக் பள்ளிகள்), ஆகியோர் தூய்மை உறுதி மொழியை வாசிக்க பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், மாநகராட்சி பணியாளர்கள் உடன் வாசித்து ஏற்றுக்கொண்டனர். அப்போது நம்மை சுற்றியுள்ள வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும், பள்ளிப்பருவத்திலேயே தூய்மை பணிகளை கடைபிடிக்க வேண்டும், உள்ளிட்ட உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், பயணிகள், பேருந்து நிலைய கடைகள்,பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் துணியாலான மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி மேயர் கலாநிதி, சுகாதார அலுவலர் திருமூர்த்தி,தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், மாநகராட்சி 2-வது வார்டு உறுப்பினர் சங்கீதா ஆகியோர் வழங்கினர்.இதனையடுத்து நாமக்கல்- வெட்டுக்காடு அரசு கலைக் கல்லூரி, அண்ணா நேரு பள்ளி மற்றும் செல்வம் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலைய பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், தேவையற்ற குப்பை, கூளங்கள் ஆகியவற்றை, கையுறை அணிந்து சேகரித்து, சாக்குப் பைகளில் அடைத்தனர். பிற்பகல் வரை தூய்மை பணியில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.சமுதாய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின்கீழ், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மரக்கன்றுகளை பராமரித்தல் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுவதாக, தேசிய பசுமை படையின் மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் கூறினார். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள மரக்கன்றுகளின் பராமரிப்பு பணியை நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் பொறுப்பேற்றுக் கொண்டார்.இதன் தொடக்கமாக பேருந்து நிலையத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு கோடைகால பராமரிப்பிற்காக கரை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் பிரபு மற்றும் பசுமை படை மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளுக்கு கரை அமைக்கும் பணியை செய்தனர். மேலும் நாமக்கல் தேசிய பசுமை படை அமைப்பு சார்பாக பொதுமக்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளாக, தயவு செய்து நாமக்கல் மாவட்டத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய நமது நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் பராமரிக்க அனைத்து மக்களும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாணவர்கள் சுமார் 250 கிலோ அளவிற்கான பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து மாநகராட்சி ஊழியர்கள் வசம் ஒப்படைத்தனர். இந்த தூய்மை பணியில் ஈடுபட்ட பள்ளி/ கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story