ஒயிட்ஸ் சாலை மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பிறப்பித்த நோட்டீஸ் ரத்து

X

ஒயிட்ஸ் சாலை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக நில ஆர்ஜிதம் கோரி யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்காக, ஆயிரம்விளக்கு - ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் உள்ள பழமையான ஸ்ரீ ரத்தின விநாயகர் - துர்க்கை அம்மன் கோயில் ராஜகோபுரத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, ‘ஆலயம் காப்போம்’ கூட்டமைப்பு சார்பில் பி.ஆர்.ரமணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, கோயில் பகுதியை நீதிபதி கே.குமரேஷ்பாபு, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர், அருகே உள்ள யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைமையகம் உள்ள பகுதிக்கு மெட்ரோ ரயில் நிலைய நுழைவுவாயிலை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 837 சதுர மீட்டர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய கடந்த செப். 26-ம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் நோட்டீஸ் பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் பி.விஜய், ‘ஆலயம் காப்போம்’ கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ராமமூர்த்தி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், “ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் யுனைட்டெட் இந்தியா நிறுவனம் ஒரு தரப்பாக சேர்க்கப்படவில்லை. எனவே, அந்த நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. பழைய திட்டப்படி, கோயில்கள் இருந்த பகுதியில் நுழைவுவாயில்களை மீண்டும் மாற்றி, பணிகளை தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
Next Story